இப்படிக்கு மகள்

அந்தம் இல்லா உறவு

பாரெங்கும் தோன்றும் உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வில் ஒரு முறைதான் உதயம் ஆனால் இவள் கதிரவனின் எழிலை வாகைச் சூடி தாய் என்ற நாமத்திற்கு உரியவளாகி வாழ்வின் மறு பிறவியை அடைந்து, புது அர்த்தத்தை கண்டாள் பத்து திங்கள் என்னை சுமந்து பெற்று. 

இனி வாழ்வில் அவள் கடந்து செல்லும் அனைத்து மணித்துளிகளும் என்னை பற்றியதே. அன்று முதல் அவள் இரவும் பகலானது என்னை சீராட்டுவதற்கு. 

ஆறு திங்கள் அவள் மடியே என் பஞ்சு மெத்தை. அவளின் மடியை விலக்கி பூமி தாயின் கரம் பற்றி நெஞ்சை கொண்டு முதல் முறை நான் இவ்வையகத்தில் நகர முயற்சிக்கும் தருணத்தில் அவள் நெஞ்சமும் பதை பதைத்தது அன்பின் பொறாமையில். 

நான் முழங்காலிட்டு முன்னேறிச் செல்லும் போது தவறு ஏதும் இழைக்காமலே என்னோடு  முழங்காலிட்டு என்னை வருடினாள். 

அங்கும் இங்கும் விழுந்தேன் என் தடம் பதிக்க. அந்த கணங்கள் ஆகாயத்தை விட அதிகமாய் நீ மனதில் கொண்ட வலிகளுக்கு நான் உடல் அளவில் அனுபவித்த வலிகள் சிறு நட்சத்திரங்களே. என் வாழ்வில் உன் கரம் கொண்டு என் தடம் பதித்து இவ்வுலகில் ஒளி வீச செய்தாய்.

'மா..மா' என்ற மொழியே அறியாத என் தத்தளிப்பு உச்சரிப்பினை செவிகளால் கேட்டு  நீ கொண்ட ஆனந்த தத்தளிப்பை அளவிட அளவுகோல் இல்லை இந்த பாரெங்கிலும். 

நடக்க கற்று தந்த உனக்கு என் பேதை காலம் வரை நான் அளித்த வெகுமதி என்னிடம் தோல்வி பெறும் ஓட்டப்பந்தயமே.

அன்பை மற்றும் உன்னிடத்தில் கற்ற நான் அகிலமும் அறிய வேண்டும் என, கல்விக்கூடம் எனும் பாசப் பிரிவினை இடையில் வைத்தாய். இனி பகலவன் உதிப்பதற்கு முன்னும் மறைந்ததற்கு பின்னும் இருக்கும் தருணங்களே அவளிடம் நான் செலவிடும் அற்புத பொழுதுகள். நான் தவறு செய்யும் போது கண்டித்து முளையிலே கிள்ளி எரிந்தாய்.

என் பெதும்பை வயதில் உலகம் உணர தொடங்கினேன் உன்னுடைய உள்ளார்ந்த அன்போடு. அப்பொழுது அவ்வபோது நான் கொள்ளும் அர்த்தமற்ற கோபங்களுக்கு அர்த்தமானாய். 

வளர்ந்தேன் மங்கையாக உன் பாதுகாப்பு கவசத்தோடு. உன் வார்த்தைகள் அனைத்திற்கும் முரண் பேசி உன்னை காயப்படுத்த தொடங்கிய காலம் அது. ஆனால் ஒவ்வொரு வாதத்திலும் வெற்றி பெற்றது என்னவோ நீதான். 

இதுவரை என்னை மழலையாக பார்த்த உன் விழிகளின் எண்ணத்தை மாற்ற செய்தது என் மடந்தை பருவம். இவை யாவும் அவள் விழிகளின் தோன்றிய மாற்றமே தவிர மனதில் நான் என்றும் குழந்தையாகவே குடிக் கொண்டுள்ளேன். 

அரிவை காலங்கள் முழுவதும் என் வாழ்வின் மகிழ்ச்சியின் அருவியான கல்லூரி காலங்களே. இதுவே அவளுடன் நான் கழிக்கும் கணங்களின் எல்லை. இனி என் பயணம் அவளுடன் மனதளவில் மட்டுமே.

அவளின் கரம் கொண்டு அறியாத ஒருவனின் கரத்தில் கொடுத்தாள் என் தெரிவை வயதில். அப்போது நீ கொண்ட துயரை உன் கண்ணீர் என்னிடம் விளக்கியது. அந்த கண்ணீருக்கு என் உள்ளம் அளித்த பதில் என்னை யார் இனி உன்னை போல் அரவணைப்பார் என்ற கேள்விதான்.  

காலங்கள் ஓடின.. பேரிளம்பெண் பருவத்தை அடைந்தேன். ஒரு பெண்ணின் இறுதி பருவம் அது.
பருவங்கள் அனைத்தும் வேகமாக பயணம் செய்தது என் வாழ்வில். ஆனால் அவள் மறுபடியும் தாய் என்ற அதே பிறவியை அடைந்தாள். ஆனால் இப்போது அவளின் மகளுக்கு அல்ல  மகளின் மகளுக்கு..!

உன் அன்பிற்கு அழிவில்லை. 

Comments

Popular posts from this blog

இது கதையல்ல...

கல்லூரியின் இறுதி நொடியில்...

உனக்கென உதித்தவள்... ✨